ஆகஸ்ட் 26, 2008

அன்னை தெரசா பொன்மொழிகள்

நாம் எவ்வளவு சேவை செய்கிறோம் என்பதை விட, செய்யும் சேவையை அன்புடன் செய்வதே முக்கியம்.
நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பதை விட, கொடுப்பதை அன்புடன் கொடுப்பதே முக்கியம்.

அமைதியின் பலன் பிரார்த்தனை
பிரார்த்தனையின் பலன் நம்பிக்கை
நம்பிக்கையின் பலன் அன்பு
அன்பின் பலன் சேவை
சேவையின் பலன் அமைதி.

இன்று (26 ஆகஸ்ட்) அன்னை தெரசாவின் பிறந்த நாள்.

ஆகஸ்ட் 5, 2008

உபுண்டு 8.04 தமிழ் எழுத்துரு பிரச்சினைக்கு தீர்வு

உபுண்டு 8.04 ஹார்டி ஹெரான் தமிழ் எழுத்துரு பிரச்சினையை சரி செய்ய எளிமையான வழி:

Terminalஐ திறந்து (Applications -> Accessories -> Terminal) கீழ்வரும் கட்டளையை கொடுக்கவும்.

sudo apt-get remove ttf-indic-fonts-core

Screenshots

Before removing ttf-indic-fonts-core

Before removing ttf-indic-fonts-core

இப்படி இருந்த தமிழ் எழுத்துரு…

After removing ttf-indic-fonts-core

After removing ttf-indic-fonts-core

ttf-indic-fonts-coreஐ விலக்கிய பிறகு இப்படி ஆகிவிட்டது!

உபுண்டு பற்றி மேலும் அறிய

ஆகஸ்ட் 3, 2008

‘நட்பு’ பற்றி திருவள்ளுவர்

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு. (திருக்குறள் 782)

வளர்பிறை சந்திரன் போல வளர்வது பண்பு நிறைந்தவருடன் கொள்ளும் நட்பு. தேய்பிறை சந்திரன் போலத் தேய்வது அறியாமையில் உழல்பவருடன் கொள்ளும் நட்பு.

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு. (திருக்குறள் 784)

நட்பு என்பது நகுதலுக்காக (சிரித்தல், பொழுது போக்குதல் (enjoyment)) அல்ல. நண்பர் தவறு செய்ய முற்படும் போது அதை கண்டிப்புடன் சுட்டிக்காட்டுதலே நட்பாகும்.

புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சிதா
னட்பாங் கிழமை தரும். (திருக்குறள் 785)

கூடிப் பழகுதலும், அடிக்கடி சந்தித்தலும், ஒருவரையொருவர் விசாரித்தலும் மட்டுமே நட்பாகிவிடாது. கூடிப் பழகாவிட்டாலும், மனதால், உணர்ச்சியால் ஒன்றுபடுவதே உண்மையான நட்பு.

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பது நட்பு. (திருக்குறள் 786)

முகத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டால் மட்டுமே அது நட்பாகிவிடாது. நெஞ்சத்தால், உள்ளத்தால் ஒன்றுபடுதலே உண்மையான நட்பு.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு. (திருக்குறள் 788 )

உடல் மேல் உடுத்தியிருக்கும் ஆடை நழுவும் போது உடனே கையானது விரைந்து சென்று நழுவும் ஆடையை சரி செய்யும். அது போல் நண்பர் துன்பப்படும் போது விரைந்து சென்று அவர் துன்பத்தைக் களைவதே உண்மையான நட்பு.

நட்பு பற்றிய பொன்மொழி ஒன்று:

நீ தன்னம்பிக்கை இழக்கும் போதும் உன் மீது நம்பிக்கை வைப்பவனே உண்மையான நண்பன்.

ஜூன் 27, 2008

ஹெலன் கெல்லர் பொன்மொழிகள்

சிறு வயதிலேயே கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தார் ஹெலன் கெல்லர். இதனால் துவண்டுவிடவில்லை அவர். ‘நம்பிக்கை’ எனும் ஒரேயொரு ஆயுதத்தை மட்டும் கொண்டு தடைக்கற்களை வழிக்கற்களாக்கி பின்னாட்களில் சிறந்த எழுத்தாளராகவும் சமூக ஆர்வலராகவும் உருவெடுத்தார்.

ஹெலன் கெல்லரின் பிறந்த நாளான இன்று அவர் உதிர்த்த சில பொன்மொழிகளின் தமிழாக்கம்.

பறக்க விரும்புபவனால் படர முடியாது.

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.

ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.

ஹெலன் கெல்லர் பற்றி மேலும் அறிய…
Helen Keller – Wikiquote

ஜூன் 24, 2008

ஆபரேஷன் தியேட்டர்!

நகரத்திலேயே பெரிய மருத்துவமனை. ஆபரேஷன் தியேட்டர். உள்ளேயிருந்து குரல் கேட்கிறது, “ஏன் பயப்படறீங்க, சின்ன ஆபரேஷன் தான், ஒரு தப்பும் நடந்துடாது, கொஞ்ச நேரத்துல முடிஞ்சுடும்… ஏன் உங்க கை வெட வெடன்னு நடுங்குது?”. உடனே கதவைத் திறந்துகொண்டு பேஷன்ட் அறக்க பறக்க ஒடி வருகிறார். வெளியிலிருந்தவர் கேட்கிறார், “அதான் நர்ஸ் சொல்றாங்க இல்ல, சின்ன ஆபரேஷன் தான், ஏன் இப்படி பயந்து ஒடி வரீங்க?”. பேஷன்ட், “எல்லாம் சரிதான், ஆனா நர்ஸ் சொன்னது என்கிட்ட இல்ல, ஆபரேஷன் பண்ணப்போற டாக்டர் கிட்ட.” 8O