செப்டம்பர் 20, 2007...11:59

ஈஷா கிராமோத்சவம்

மறுமொழிகளுக்குச் செல்க

இன்று வாழ்ந்து வரும் ஆன்மீக குருக்களிலேயே என்னை வியக்க வைப்பவர்களில் சத்குரு ஜக்கி வாசுதேவும் ஒருவர். அவருடைய கட்டுரைகளை ஆனந்த விகடன் பத்திரிகையில் நீங்கள் படித்திருக்கலாம். நம் அன்றாட பிரச்சனைகளுக்கு மிகவும் தெளிவாக நெத்தியடியாக தீர்வு சொல்லி நம் புத்தியை தெளிவாக்குபவர்.

சத்குரு ஜக்கி வாசுதேவ் தலைமையிலும் வழிகாட்டுதலிலும் இயங்கும் ஈஷா யோக மையத்தின் செயல்பாடுகளும் என்னை பெருவியப்பில் ஆழ்த்துபவை. இவர்களுடைய பசுமைக்கரங்கள் திட்டத்தின் கீழ் சென்ற வருடம் தமிழ்நாட்டில் மட்டும் 8,52,587 மரக்கன்றுகள் நடப்பட்டது. இது உலக சாதனை மட்டுமல்ல, global warming போன்ற பிரச்சனைகளால் அழிவை எதிர்நோக்கும் மனித சமுதாயத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் மரங்கள் அழிவதைத் தடுத்து பசுமைப் போர்வையை இது போல் துரிதமாக அதிகப்படுத்தினால் மட்டுமே முடியும். அவ்வகையில் ஈஷா மையம் செய்வது மிகவும் பாராட்டத்தக்கது. இவ்வருடம் இரண்டரை கோடி மரக்கன்றுகளை நடப்போவதாக ஈஷா மையம் அறிவித்துள்ளது.

ஈஷா மையத்தின் மற்றொரு திட்டமான கிராமப் புத்துணர்வுத்திட்டத்தின் கீழ் கிராம மக்களுக்கு இவர்கள் அறிமுகப்படுத்திய விளையாட்டுப் போட்டிகள் மக்களுக்கு புதிய தெம்பையும் உற்சாகத்தையும் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது (இது தொடர்பான வீடியோவை பாருங்கள்). வருடந்தோறும் பல்வேறு கிராம மக்களை ஒன்றுகூட்டி போட்டிகள் நடத்தி கிராமோத்சவம் என்ற பெயரில் பெரிதாக கொண்டாடுகின்றனர்.

இவ்வருடம் சென்னை அண்ணா பல்கலைக்கழக திடலில் கிராமோத்சவம் விழாவை வரும் ஞாயிற்றுக்கிழமை (23 செப்டம்பர் 2007) அன்று ஈஷா மையம் நடத்த உள்ளது. கிராம மக்களிடையே விளையாட்டுப் போட்டிகள், பாரம்பரிய சமையல் பற்றிய நிகழ்ச்சிகள், தமிழக முதல்வர் தலைமையில் ‘பசுமைக்கரங்கள் திட்டம்’ பற்றிய நிகழ்ச்சி, சத்குருவுடன் மஹாசத்சங்கம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளது. அனைவரும் கலந்துகொள்ளலாம். இதுவரை ஈஷா நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாத நான் இவ்விழாவுக்குச் செல்வதாக உள்ளேன். சென்னையில் இருந்தால் நீங்களும் தான் வாருங்களேன்!

மேலும் விவரங்களுக்கு கிராமோத்சவம் பற்றிய வலைத்தளத்தை பார்க்கவும்.

பசுமைக்கரங்கள் வலைத்தளத்தையும் பார்க்கவும்.

மறுமொழி இடுக