கௌதம புத்தர் ஞானம் அடைந்த பிறகு ஊர் ஊராகச் சென்று மக்களுக்கு உபதேசித்தார். புத்தரின் போதனையால் பலனடைந்த பலர் அவருடைய சங்கத்தில் சேர்ந்து சிஷ்யர்கள் ஆயினர், புத்தர் எங்கு சென்றாலும் பெரும் கூட்டம் கூடியது. அவ்வாறு அவர் ஒரு ஊருக்குச் சென்று அங்குள்ள ஓர் மண்டபத்தில் பெருங்கூட்டத்தினிடையே போதித்துக் கொண்டிருந்தார். அவ்வூரில் இருந்த மனிதன் ஒருவனுக்கு புத்தரைச் சுற்றி பெரும் கூட்டம் கூடி அவர் புகழ் பாடுவது பிடிக்கவில்லை. புத்தர் ஒரு போலிச் சாமியார் என நம்பினான். புத்தர் போதனை செய்த இடத்திற்குச் சென்று கூட்டத்தின் முன்னிலையிலேயே அவரைக் கண்டபடி அசிங்கம் அசிங்கமாகத் திட்டத் தீர்த்தான். புத்தரின் போதனைகளைக் கேட்டுக்கொண்டிருந்த மக்களுக்கும் புத்திரின் சீடர்களுக்கும் அந்த மனிதன் மீது கோபம் பொத்துக்கொண்டு வந்தது, அவனை ஒரு வழி பண்ண வேண்டும் போல் தோன்றியது. ஆனால் புத்தரோ அமைதியான முகத்துடன் அம்மனிதன் திட்டுவதை பார்த்துக்கொண்டிருந்தார், அவனை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று தன் சீடர்களுக்கு சைகை செய்தார். அம்மனிதன், தன் வெறுப்பை கொட்டித் தீர்த்தவுடன் அவ்விடத்தை விட்டுச் சென்றுவிட்டான். அன்றிரவு அவனுக்குத் தூக்கம் வரவில்லை. அவன் மனதை ஏதோ ஒன்று குத்துவது போல் இருந்தது. தான் இவ்வளவு வசைபாடியும் புத்தர் என்றழைக்கப்படும் அந்த மனிதர் அமைதியே உருவாக விளங்கியதை நினைத்ததும் அவனுக்கு வெட்கம் பீறிட்டுக்கொண்டு வந்தது.
அடுத்த நாள் முதல் வேளையாக புத்தர் சபைக்குச் சென்று அவர் காலில் நெடுஞ்சான்கிடையாக விழுந்து வணங்கினான். புத்தரின் மகிமையை தான் புரிந்துகொண்டதாகவும், தான் செய்தது மிகப்பெரிய தவறு என்றும் கூறி தன்னை மன்னித்து விடும்படி வேண்டினான். அதற்கு புத்தரோ, “நான் உன்னை மன்னிக்க முடியாது” என்று அவனைப் பார்த்துச் சொன்னார். அந்த மனிதனுக்கு, இவ்வார்த்தைகள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தின. சபையில் இருந்தவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை, நேற்று தான் புத்தர் புன்னகை பூத்த முகத்துடன் அமைதியாக இவன் திட்டுவதைக் கேட்டுக்கொண்டிருந்தார், இவனை ஒன்றும் செய்யவேண்டாம் என்றும் கூறினார், இன்று இவன் வந்து தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டும் அவனை மன்னிக்க முடியாது என்று கூறுகிறாரே என்று அனைவருக்கும் ஒரே குழப்பம். அப்போது புத்தர் பேசினார், “மகனே, நான் உன்னை மன்னிக்க முடியாது. ஏனெனில் நேற்று சபையில் வந்து திட்டியவன் நீயல்ல, அவன் நேற்றோடு முடிந்துவிட்டான், இன்று வந்திருக்கும் நீ அவனல்ல. நேற்று திட்டப்பட்டவனும் நானல்ல, இப்போது யார், யாரை மன்னிப்பது?” என்றார். மன்னிப்புக் கேட்டவன் மெய்சிலிர்த்துப் போனான்! பிறகென்ன, அவனும் சங்கத்தில் சேர்ந்தான், “புத்தம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி” என்று பாடிக்கொண்டு ஜோதியில் கலந்தான்.
புத்தரின் மனம் தான் எவ்வளவு விசாலமானது. நம்மாலும் ஏன் புத்தரைப் போல் இருக்க முடியாது? நமக்கு ஒருவர் தீங்கிழைக்கும் போது அதனால் பாதிப்படைவதோ, அல்லது, அதை ஒதுக்கி மறந்து விட்டு அடுத்த வேலையைப் பார்ப்பதோ நம் கையில் தானே இருக்கிறது. அடுத்தவர் நமக்கு தீங்கிழைக்கும் போது நாம் ஒன்றும் இளிச்சவாயனாக அவன் செய்வதை பார்த்துக் கொண்டிருக்கச் சொல்லவில்லை. அவன் தன் தவறைத் திருத்திக்கொள்ள எவ்வகையல் நம்மால் முடியுமோ அவ்வகையில் உதவுவது நம் கடமை. ஆனால் அவன் செய்த தீங்குக்கு நாமும் பதிலாக அவனைப் பழி வாங்க நினைத்தால் அவனிடம் இருந்த காழ்ப்புணர்ச்சி எனும் வியாதி நம்மையும் தொற்றிக் கொண்டதாகிவிடும், அவனும் திருந்தமாட்டான். மேலும் அவன் நமக்குத் திருப்பித் தீங்கு செய்வதும், நாம் அவனை மறுபடியும் பழிவாங்குவதும் என இந்த சுழற்சி வளர்ந்துகொண்டே தான் போகும். யாராவது ஒருவர் நிறுத்த வேண்டும், நாமே அந்த வாய்ப்பை ஏன் முதல் முறையிலேயே பயன்படுத்திக் கொள்ளக்கூடாது?
அடுத்தவர் நமக்குச் செய்யும் தீங்கை விட, அதை நாம் நினைத்துக் கொண்டு அவர் மீது காழ்ப்புணர்ச்சியை வளர்த்துக்கொள்வதே நம் மனதையும் உடலையும் ஆரோக்கியம் குன்றச் செய்யும். நம்பினால் நம்புங்கள், ஒரு மனிதருக்கு வரும் பெரும்பாலான வியாதிகள் அவர் காலம் காலமாக மனதில் தேக்கி வைத்திருக்கும் கோபம், தாபம், பேராசை, பொறாமை, வெறுப்புணர்ச்சி போன்றவற்றையே காரணமாக கொண்டுள்ளன. முன்னே சொன்னது போல் மற்றவர் தன் தவறுகளை திருத்திக் கொள்ள நாம் நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும். ஆனால் அதற்கு முன் நாம் நம் மனதிலுள்ள காழ்ப்புணர்ச்சிகளைக் களைந்து நம் புத்தியை தெளிவாக்கினால் தான் இந்த பழிவாங்கும் சுழற்சியை நம்மால் நிறுத்த முடியும்.
மற்றவர் நமக்கு என்ன கெடுதல் செய்தாலும், அதனால் பாதிப்படையக் கூடிய நிலையில் நாம் இருந்தால் அதற்கு நாம் தானே காரணம்? சூரியனைப் பார்த்து நாய் குரைத்தால் அதனால் சூரியனுக்கு என்ன பாதிப்பு? எதனாலும் பாதிப்படையாத உறுதியான மனிதனாக, சமூகமாக, நாடாக, இனமாக நாம் விளங்காவிட்டால் அது நம்முடைய தவறே ஆகும். ஒருவன் நமக்குத் தீங்கு செய்த பின் அவனைப் பழி வாங்குவதை விட அவன் அச்செயலைச் செய்யும் முன்பே நாம் நம்மை தற்காத்துக் கொள்வதே புத்திசாலித்தனம். அஹிம்சை போதித்த புத்தரே காட்டிற்கு தவம் செய்யச் சென்ற போது தம்மை காட்டு விலங்குகளிலிருந்து காத்துக் கொள்வதற்காக கையில் தடியுடன் சென்றார். இங்கு சொல்வதெல்லாம், நம் சக்திகளையெல்லாம் நம்மை உறுதியான, யாரும் தாக்க முடியாத, ஏதனாலும் பாதிப்படையாத மனிதனாக, சமூகமாக ஆக்கிக்கொள்வதிலும், தீங்கு செய்பவர் தம்மைத் திருத்திக்கொள்ள வாய்ப்பளித்து அதற்கு நம்மால் இயன்ற உதவியை செய்வதிலும் செலவிடவேண்டுமே தவிர, நாமும் அவரைத் திருப்பித் தாக்கி நம்முடைய, மற்றும் அனைவருடைய அழிவுக்கும் வழிவகை செய்வதில் அல்ல.
இது தொடர்பான மற்றொரு பதிவையும் பார்க்கவும்: இன்னா செய்தாரை ஒறுத்தல்…
2 மறுமொழிகள்
16:48 இல் அக்டோபர் 9, 2007
எத்தனை காந்தசக்தியான பதிலிது. மன்னிக்கத் தெரிந்தவர்களே மகான்கள். இதனால், நாமும் மகான்கள் ஆகலாம் என்பது திண்ணமே!!
நல்ல பல கருத்துக்களை சம்பவங்களினூடாகத் தொகுத்துத் தந்த விதம் அருமை. தொடரட்டும் பரவசம்.
இனிய புன்னகையுடன்,
உதய தாரகை
13:54 இல் அக்டோபர் 10, 2007
ஆம் உண்மையான மன்னிப்பு என்பது என்ன என அறிந்தவர்களே மகான்கள். ஆனால் அத்தகைய மகான்களை ஒரு உயரத்தில் தூக்கி வைத்து அவ்வுயரங்களை சாதாரண மனிதர்களாகிய நம்மால் எட்ட முடியாது என்பது போன்ற ஒரு மாயையை உருவாக்கி நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு வருகிறோம்.
மகான்கள் எட்டிய அதே உயரத்தை எட்ட முடியாவிட்டாலும், அவர்களை சரியாகப் புரிந்து கொண்டு, புரிந்து கொண்டவற்றை நம் வாழ்க்கையில் செயல்படுத்த முயன்றால் அவர்கள் எட்டியதில் 25% உயரத்தையாவது நாமே கண்டிப்பாக எட்டலாம். இந்த 25% உயரத்தையாவது குறைந்தபட்சம் உலகிலுள்ள 25% மனிதர்களாவது எட்டினாலே போதும், உலகமே சொர்க்கமாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை. (இதைப்படித்துவிட்டு யாராவது குழம்பிப்போய் பைத்தியமாகாமல் இருந்தால் சரி
)
மறுமொழிக்கும், உங்கள் ஊக்குவிப்புக்கும் மிக்க நன்றி!