நவம்பர் 8, 2007...20:07

தீபாவளி வாழ்த்துக்கள்!

மறுமொழிகளுக்குச் செல்க

முதலில் தென்கச்சி சுவாமிநாதனின் கதை ஒன்று…

இருட்டும் நேரம். ஒருவன் ஓடிப்போய் ஒரு விளக்கை ஏற்றிக்கொண்டு வந்தான்.

“என்ன செய்கிறாய்?” — அவர்

“இருட்டை விரட்டிக் கொண்டிருக்கிறேன்” என்றான் அவன். இவர் சிரித்தார்.

“ஏன் சிரிக்கிறீர்கள்?”

“இல்லாத ஒன்றை எப்படி விரட்ட முடியும்?”

அவனுக்கு ஒன்றும் புரியவில்லை, “என்ன சொல்கிறீர்கள்? இருட்டு என்பது இல்லாத ஒன்றா…?”

“ஆமாம். இருட்டு என்று தனியாக ஒன்றுமில்லை, வெளிச்சம் இல்லாத நிலை தான் அது!

“ஓர் இடத்தில் வெளிச்சம் இருந்தால் வெளிச்சமாக உள்ளது என்கிறோம். அந்த இடத்தில் வெளிச்சம் இல்லை என்றால் இருட்டு என்கிறோம், அவ்வளவு தான். ஆக அந்த இடத்தில் இருப்பதும் இல்லாமல் போவதும் வெளிச்சம் தான்.

“இருட்டு என்று தனியாக ஏதோ ஒன்று ஓடி வந்து அங்கே உட்காருவதில்லை. இருட்டு என்ற ஒன்று ஏற்கனவே இருப்பதாகவும் வெளிச்சத்தை கண்டவுடனே அது எழுந்து ஓடிப் போவதாகவும் நினைத்துக் கொள்கிறோம். வெளிச்சம் இல்லைமை தான் இருட்டு என்பதைப் புரிந்து கொள்!”

கையில் விளக்கை வைத்திருப்பவன் சிந்திக்க ஆரம்பித்தான். இருட்டில் வெளிச்சத்தை வைத்திருக்கிறவர் தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.

நம் மனதிற்குள் பயம் என்று சொல்கிறோம் இல்லையா…? அதுகூட அந்த இருட்டு மாதிரி தான். வெளிச்சம் இல்லாமை — இருட்டு — என்கிறோம் அல்லவா? அது மாதிரி அன்பு இல்லாமை தான் பயம்.

அன்பு என்கிற விளக்கை ஏற்றுகிறபோது அங்கே பயம் என்கிற இருட்டு இருப்பதில்லை.

(ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் நவம்பர் 2007 இதழில் தென்கச்சி சுவாமிநாதன் எழுதிய “மத்தாப்பு வெளிச்சம்” எனும் கட்டுரையிலிருந்து)

ஆம்…. அன்பு எனும் சுடர் ஒளிரும் இடத்தில் அச்சத்திற்கு இடம் ஏது? ஒளியைக் கொண்டாடும் இந்த தீபாவளி நந்நாளில் (மட்டுமல்லாமல், என்றுமே) அனைவரின் உள்ளங்களிலும் அன்பெனும் தீபம் பிரகாசமாய் ஒளிரவும், ஆனந்தம் பெருகவும் என் வாழ்த்துக்கள்! :)

5 மறுமொழிகள்

  • உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

  • ‘பளிச்’ன்னு சொல்லிட்டீங்க!!!!!

    தீபாவளிக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

  • அறிவியலார் இருட்டுக்கு அப்புறம் தான் வெளிச்சம் வந்தது என்பார். வெளிச்சம் தரும் சூரியன் இல்லாவிட்டால் எங்கும் இருளல்லவா?

    ஆனால், யோகியரோ அறிவு என்னும் வெளிச்சம் எப்போதுமே இருக்கிறது. மாயை என்னும் இருளினால்தான் அந்த வெளிச்சம் தெரியமால் இருக்கிறது என்கிறார்!

    மனதிற்குள் பயம் என்னும் இருளோ எப்போதும் இருப்பதில்லை. அன்பில்லாத இடத்தில் மட்டும்தான் அந்த இருள்!
    மிக்க நன்று!

  • “அன்பே சிவம்”…

    தீபாவளி நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

    தொடர்ந்தும் பதியுங்கள். பகிருங்கள். பரவசங்களை.

    இனிய புன்னகையுடன்,
    உதய தாரகை

  • தீபாவளி வாழ்த்துக்கள்.சிந்திக்க வைத்த பதிவு :) நன்றி


மறுமொழி இடுக