நவம்பர் 20, 2007...20:57

புத்தம் புது பூமி வேண்டும்…

மறுமொழிகளுக்குச் செல்க

“திருடா திருடா” திரைப்படத்தில் எனக்குப் மிகவும் பிடித்த பாடல் ஒன்றின் வரிகள்…

புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்

……

சொந்த ஆகாயம் வேண்டும்
ஜோடி நிலவொன்று வேண்டும்
நெற்றி வேர்க்கின்ற போது
அந்த நிலவில் மழை பெய்ய வேண்டும்

வண்ண விண்மீன்கள் வேண்டும்
மலர்கள் வாய் பேச வேண்டும்
வண்டு உட்காரும் பூ மேலே
நான் வந்து உட்காரும் வரம் வேண்டும்

கடவுளே கொஞ்சம் வழி விடு
உன் அருகிலே ஓர் இடம் கொடு
புன்னகை எங்கள் தாய்மொழி என்ற வரம் கொடு
பூமியில் சில மாறுதல் தனை வர விடு

……

யுத்தம் இல்லாத பூமி
ஒரு சத்தம் இல்லாமல் வேண்டும்
மரணம் காணாத மனித இனம்
இந்த மண்ணில் நிலைக் கொள்ளும் வரம் வேண்டும்

பஞ்சம் பசி போக்க வேண்டும்
பாலைவனம் பூக்க வேண்டும்
சாந்தி சாந்தி என்ற சங்கீதம்
சுகம் ஏந்தி ஏந்தி வந்து விழ வேண்டும்

போனவை அட போகட்டும்
வந்தவை இனி வாழட்டும்
தேசத்தின் எல்லை கோடுகள் அவை தீரட்டும்
தெய்வங்கள் இந்த மண்ணிலே வந்து வாழட்டும்

பாடல் முழதுமே எனக்குப் பிடித்தது தான், அதிலும் எனக்கு மிகவும் பிடித்த வரிகளை bold செய்திருக்கிறேன். “புன்னகை எங்கள் தாய்மொழி என்ற வரம் கொடு”, மற்றும் அந்த கடைசி இரண்டு வரிகள், இதிலெல்லாம் வெளிப்படும் கருத்துகள் எத்தனை ஆழம்! எத்தனை அழகு!

இந்த திரைப்படம் வந்த போது நான் சின்னப் பையன். ரஹ்மானின் இசைக்காக இந்தப் பாடலை அடிக்கடி கேட்டு ரசித்திருந்தாலும் பாடல் வரிகளைப் புரிந்து கொண்டு பாராட்டும் அளவுக்கு அறிவு கிடையாது. இடைப்பட்ட காலத்திலும் போகிற போக்கில் அப்பப்போது இப்பாடலை கேட்டிருக்கிறேன்… புரிந்தாலும் பெரிதாக ஒன்றும் விளங்கியதில்லை. இப்போதும் கூட கவிதைகளையெல்லாம் ரசிக்கத் தெரிவதில்லை எனக்கு. ஆனால் நேற்றிரவு பழைய பாடல்களையெல்லாம் தேடிப்பிடித்து கேட்டுக் கொண்டிருந்தபோது இந்தப் பாட்டை மீண்டும் ஒருமுறை கேட்டேன், எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு அழகான பிரார்த்தனை, இன்றைய காலத்தில் மிகவும் தேவையானதொரு affirmation போலல்லவா இருக்கிறது. வைரமுத்துவுக்கு ஒரு சபாஷ்!

இதோ அந்தப் பாடல், நீங்கள் கேட்டு(ம் பார்த்தும்) ரசிப்பதற்கு…

இதே படத்தில் வரும் “ராசாத்தி…” பாடலும் எனக்குப் மிகவும் பிடித்த ஒன்று. வைரமுத்துவின் வரிகளுக்காக என்பதை விட ஷாகுல் ஹமீதின் குரலுக்காக (“என் உயிரு என்னுதில்லை” என்று பாடிய அவரது உயிர் இளமையிலேயே பிரிந்தது ஒரு பெரிய இழப்பு). ரஹ்மானின் இசையில் அந்தப் பாடலுக்கு இன்னொரு தனிச்சிறப்பும் உண்டு, என்ன அது? பெரிய சிதம்பர ரகசியமெல்லாம் இல்லை, நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்கும்…. தெரியாதவங்க கீழே இருக்கும் வீடியோவை பார்த்து (கேட்டு) கண்டுபிடிச்சு மறுமொழியா சொல்லுங்க. அப்படியும் கண்டுபிடிக்க முடியாதவங்களுக்கு நான் அப்புறமா சொல்றேன்.

7 மறுமொழிகள்


மறுமொழி இடுக