சில மாதங்களுக்கு முன்பு சுற்றுச்சூழல் மாசடைதல், புவி வெப்பமடைதல் போன்ற விஷயங்களைப் பற்றி பதிவிட்டிருந்தேன். அதற்கு மறுமொழி அளித்த ஒரு நண்பர், “அதெப்படி 3 பில்லியன் வருடங்களாக சுழன்று வரும் பூமியின் வெப்பநிலையை மனிதன் 50 வருடங்களாக புரிந்து வரும் செயல்கள் பாதிக்க முடியும்” என்கிற ரீதியில் கேட்டிுருந்தார். இது நல்ல கேள்வி, பலர் மனதில் இயல்பாக தோன்றக்கூடிய கேள்வி. நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு வாரப்பத்திரிகையில் சுஜாதா அவர்களின் கேள்வி பதில் பகுதியில் புவி வெப்பமடைதல் பற்றிய ஒருவரின் கேள்விக்கு, “மனித செயல்களெல்லாம் பூமியை ஒன்றும் செய்துவிட முடியாது. இதெல்லாம் அதுக்கு கொசு கடிக்கிற மாதிரி, புவி வெப்பமடைதல் அபாயம் எல்லாம் சும்மா கட்டுக்கதை” என்பது போல் பதில் அளித்திருந்தார். உண்மையில் நானும் ஆரம்பத்தில் இது போன்றே சிந்தித்திருக்கிறேன்.
புவி வெப்பமடைதல் எல்லாம் பூமிக்கு கொசு கடிக்கிற மாதிரி கொசுறான விஷயம் என்பது உண்மை தான். ஆனால், கொசு கடித்து நம் ரத்தத்தை உறிஞ்சினால் நாம் அதை அடிக்கிறோமா இல்லையா? கொசு கடிப்பது, கொஞ்சம் ரத்தம் குடிப்பது, நாம் அதை அடிப்பது, இதெல்லாம் கடிபட்ட மனிதனுக்கு பெரிய வாழ்க்கைப் பிரச்சனை இல்லை. ஆனால் கொசுவுக்கு அது நிச்சயம் வாழ்க்கைப் பிரச்சனை. அது போல் பூமியின் வளங்களை தன் சுயநலங்களுக்காக மனிதன் அரக்கத்தனமாக உறிஞ்சி எடுப்பதும், மரங்களை வெட்டி காடுகளை அழிப்பதும், சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதும் பூமித்தாயின் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால், சும்மா ஜுஜுபி. ஆனால் இதெல்லாம் மனித குலத்தினராகிய நமக்குத்தான் ஆபத்தில் போய் முடியும். மனிதனின் இது போன்ற செயல்களால் விளைந்த ‘புவி வெப்பமடைதல்’ (global warming) இன்று மனித குலத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் பிரச்சனையாக உருவெடுத்து வளர்ந்திருப்பது கசப்பான உண்மை. ஒரேயடியாக சுனாமி போல் ஏதாவது வந்து நம்மை அடித்துக்கொண்டு போனால் கூட பரவாயில்லை. இது கொஞ்சம் கொஞ்சமாக நம்மை துன்பப்படுத்தி கொல்லக் கூடிய பிரச்சனை.
புவி வெப்பமடைவது, அதனால் வடதுருவ, தென்துருவ பனிக்கட்டிகள் உருகி வருவது, கடல்மட்டம் உயர்வது, தட்ப வெட்ப நிலை கன்னாபின்னாவென்று மாறிக்கொண்டு வருவது, கண்ட இடங்களில் கண்ட நேரத்தில் கண்டபடி மழை பெய்வது, மழை பெய்ய வேண்டிய இடத்தில் வறட்சி காணப்படுவது… இதெல்லாம் மனிதனின் செயல்களாலேயே விளைபவை என்பது இன்று திட்டவட்டமாக நிரூபிக்கப்பட்டு பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மைகள். இன்னமும் கூட மனித செயல்களால் தான் புவி வெப்பமடைகிறதா என்று விவாதம் செய்து கொண்டிருந்தால் கடைசி வரை விவாதித்துக் கொண்டேயிருக்க வேண்டியது தான், அப்புறம் ஊர் பற்றி எரிய நீரோ பிடில் வாசித்த கதையாகிவிடும்.
ஆறடி உயரம் உள்ள ஒரு மனிதனை கண்ணுக்கே தெரியாத வைரஸ் கிருமிகள் பாதித்து ஜுரத்தை ஏற்படுத்துவதில்லையா? அது போல் மூன்று பில்லியன் வருடங்களாக சுற்றி வரும் பிரம்மாண்ட பூமியை அற்ப மனித குலம் தன் ஐம்பது வருட அறிவுகெட்ட செயல்களால் பாதித்து அதன் வெப்பத்தை சற்று அதிகப்படுத்துவதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? புவி வெப்பமடைதல் என்பது பூமிக்கு சும்மா ஒரு நாள் ஜுரம் தான். ஆனால் நம் மனித குலத்துக்கு தான் அழிவு காத்திருக்கிறது, அதாவது நாம் உடனே விழித்து பொறுப்புணர்ச்சியுடன் செயல்படத் துவங்காவிட்டால். பூமியை நாம் ஒன்றும் காக்க வேண்டியதில்லை, நாம் இன்றோ இன்னும் பல ஆயிரம் வருடங்கள் கழித்தோ அழிந்த பின்னும் பல கோடி வருடங்களுக்கு பூமி சுழன்று கொண்டு தான் இருக்கும். நம்மைத் தான் இப்போது நாம் காத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். நம்மைப் போன்ற சாதாரண மக்கள் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்? மரங்கள் நடுவது, சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்துக் கொள்வது, எரிசக்தி, மின்சாரம் இதையெல்லாம் வீணாக்காமல் தேவையான சமயங்களில் மட்டும் பயன்படுத்துவது, இது போன்ற நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை எங்கும் ஏற்படுத்துவது.
(குறிப்பு: முதலில் புவி வெப்பத்தால் ஏற்படும் அபாயங்களை சுஜாதா ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், பின்னர் சில காலம் கழித்து அவரே இந்த உண்மையை ஏற்றுக் கொண்டார்.)
4 மறுமொழிகள்
15:57 இல் ஏப்ரல் 16, 2008
நல்ல பதிவு!
பூமி தன் சமநிலையை மீளப் பெற என்ன வேண்டுமானாலும் செய்யும்.
அதாவது மனுசன் கொசுவை நச்சென்று அடிக்கற மாதிரி, பூமி மனுசனை நச்சென்று அடித்துவிடும்.
14:54 இல் ஏப்ரல் 17, 2008
ஹா ஹா
… மயூரேசன், நீங்கள் சொல்வது சரி தான். ஆனாலும் பூமித்தாய் நம் விளையாட்டுகளை மிகவும் பொறுமையாகத் தான் சகித்துப் பார்க்கிறாள். மனிதன் தான் சீக்கிரம் புரிந்து கொள்ள வேண்டும். ‘உலகம் பிறந்தது என் சுயநலத்துக்காக’ என்பது போன்ற மனநிலையை மாற்றிக்கொண்டு இயற்கையுடன் இசைந்து வாழ நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
11:59 இல் ஜூன் 27, 2008
இந்தக்கருத்துடன் எனக்கும் உடன்பாடு இருக்கிறது. குறுகியகால இலாபத்திற்காக நமது சூழலையும் உலகத்தையும் அழிக்கிறோம். இதற்கு சிறந்த உதாரணம் பங்கு வர்த்தகம்.. யாரோ ஒருவரின் இல்லது சிலரின் இலாபத்திற்காக பல நாடுகளின் நாணயப் பெறுமதிகள் விழுங்கப்பட்டு பொருளாதாரப் பாதிப்பு ஏற்படுகிறது. அதுபோலவேதான் இது…..
நன்றி…
09:52 இல் ஆகஸ்ட் 4, 2008
புகைப்படப் பேழைக்கு தங்களின் அன்பு வருகைக்கு நன்றி.
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/