ஜூன் 21, 2008...12:52

தசாவதாரம்

மறுமொழிகளுக்குச் செல்க

ஒரே திரைப்படத்தில் பத்து வேடங்களில் நடித்து சாதிக்க வேண்டும் என்று கமல் நினைத்திருக்கிறார், சாதித்திருக்கிறார். சும்மா சொல்லக்கூடாது, ஒவ்வொரு வேடங்களுக்கும் மிகவும் சிரத்தை எடுத்து நடித்திருக்கிறார்.

12ஆம் நூற்றாண்டு நம்பி வேடத்தில் விஷ்ணு மீது கொண்ட நம்பிக்கையாலும் பக்தியாலும் நம்மை உருக்குகிறார். பல்ராம் நாயுடுவாக கலகலப்பூட்டுகிறார். பிராமணப் பாட்டி வேடத்தில் பாட்டியாகவே மாறி விட்டிருக்கிறார். அவ்தார் சிங்கின் முக பாவனைகளை மேக்கப் மறைத்தாலும், கண்களாலேயே உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார்.

அமெரிக்க ஜனாதிபதி வேடத்தில் ஜார்ஜ் புஷ்ஷின் பொது அறிவையும் சமூக அக்கறையையும் நன்றாகவே வெளிப்படுத்தியுள்ளார் கமல்!

கிறிஸ் ஃபிளெட்சர் வேடத்தில் கமல் வெளிப்படுத்தும் அனாயசமான அலட்சியமான வில்லத்தனம் ஹாலிவுட் ரகம். ஜப்பானிய வேடத்திலும் ஆக்ஷனில் கலக்குகிறார். வில்லன் கிறிஸ் ஃபிளெட்சர், ஜப்பானியர், இஸ்லாமியர் ஆகிய பாத்திரங்களுக்காக கமலின் முகத்தில் மேக்கப்பை ஒரேயடியாக அப்பி விட்டிருப்பதால் இவர்களின் முகம் எப்போதும் இறுக்கமாகவே உள்ளது, செயற்கைத்தனம் நன்றாகவே தெரிகிறது. வில்லன் வேடத்தில் முகம் இறுக்கமாக இருந்தாலும் பாடி லாங்குவேஜ் அதிரடி!

எல்லா பாத்திரங்களையும் விட ‘வின்சென்ட் பூவராகன்’ தான் நம் மனதில் இடம் பிடிக்கிறார்.

மேக்கப் இல்லாமல் இயல்பாக கமல் நடித்திருக்கும் ஒரே பாத்திரம் ‘கோவிந்தன் ராமசாமி’.

படம் நெடுகவும் கமல் ராஜ்ஜியம் தான். கமலுக்கு அடுத்தபடியாக படம் முழுவதும் வருவது அசின் மட்டுமே. கொஞ்சம் அலட்டல் இருந்தாலும் கண்ணியமான பாத்திரம். நன்றாகவே செய்துள்ளார். 12ஆம் நூற்றாண்டு பாத்திரத்திலும் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மல்லிகா ஷெராவத், சந்தான பாரதி, ‘அப்பாராவ்’, நெப்போலியன் போன்றவர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தத்தம் பங்கை செவ்வனே செய்து முடித்திருக்கிறார்கள். நாகேஷ், கே.ஆர். விஜயா, ஜெயப்பிரதா, வையாபுரி போன்றவர்ளுக்கு ஸ்கோப் இல்லாத காரெக்டர்கள்.

விறுவிறு திரைக்கதை படத்தை சுவாரஸ்யமாகக் கொண்டு செல்கிறது. திரைக்கதையிலும் கமல் சாதித்திருக்கிறார். வசனங்களில் நகைச்சுவையுடன் ஆங்காங்கே சமூக உணர்வுகளும் பகுத்தறிவும் பளிச்சிடுகின்றன. உதாரணமாக, பயோ ஆயுதங்களின் அபாயங்கள், பணத்திற்காக மனசாட்சியை விற்கும் விஞ்ஞானிகள், மணல் கொள்ளை அநியாயங்கள், இன்றும் தொடரும் சில மூட நம்பிக்கைகள், “குரான் படிப்பவன் எல்லாம் தீவிரவாதி அல்ல”, “தெலுங்குக்காரன் நானே தமிழ் பேசும் போது தஞ்சாவூர்க்காரன் நீ இங்கிலீஷ் பேசறே” போன்றவை. ஆனால் நாத்திகமும் விஞ்ஞானமும் தான் பகுத்தறிவு என்பது போன்ற தோரனை வசனங்களில் சில இடங்களில் தெரிகிறது. நாத்திகத்திலும், ஏன் விஞ்ஞானத்திலும் கூட மூட நம்பிக்கைகள் இருக்கத்தான் செய்கின்றன.

வாலியின் பாடல் வரிகளில் வெளிப்படுவதோ அர்த்தமுள்ள பகுத்தறிவு. குறிப்பாக, கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது, கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது“, “ஊனக் கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம்தான், ஞானக்கண்ணில் பார்த்தால் யாரும் சுற்றம்தான்”, “சைவம் என்று பார்த்தால் தெய்வம் தெரியாது, தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது”, போன்ற வரிகள்.

படத்தின் பாடல்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பே ஆராவாரத்துடன் வெளியிடப்பட்டு பாடல்கள் தமிழ்நாடெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. தன் பானியிலிருந்து சற்றே விலகி ஒரு தமிழ்ப் படத்திற்கு நன்றாகவே இசையமைத்திருக்கிறார் ஹிமேஷ் ரேஷமய்யா. “கல்லை மட்டும் கண்டால்”, “முகுந்தா” பாடல்கள் அருமை. தேவிஸ்ரீ பிரசாதும் ரீ ரெக்கார்டிங்கில் கலக்கியிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் புகுந்து விளையாடியிருக்கிறார்.

ஷங்கர் போல் அனாவசியமாக பாடல் காட்சிகளுக்கு செலவு செய்யாமல் இப்படத்தில் கிராஃபிக்ஸ், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் தொழில்நுட்பங்கள் சரியான முறையில் கதைக்கு ஏற்றவாறு பயன்படுத்தப் பட்டு திரைப்படத்தை மெருகூட்டுகிறது. ஆனாலும் சில இடங்களில், குறிப்பாக 12நூற்றாண்டு காட்சிகளில் கிராஃபிக்ஸில் கொஞ்சமே கொஞ்சம் அமெச்சூர்தனம் தெரிவது உண்மை.

கமலின் பத்து அவதாரப் பிரதாபங்களே படத்தை ஒரேயடியாக விழுங்கிவிடாமல் ஒரு சுவரஸ்யமான பொழுதுபோக்குப் படமாக தசாவதாரம் வந்திருப்பதில் இயக்குனர் கே. எஸ் ரவிகுமாரின் பங்கு நன்றாகவே தெரிகிறது. கடைசி பாடலில் கே. எஸ். ரவிகுமார் நன்றாகவே ஆட்டம் போடுகிறார்!

கமலின் தசாவதார சாதனைகளை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு சில அவதாரங்களுக்கு வேறு நடிகர்களை நடிக்க விட்டிருந்தால் இன்னும் கொஞ்சம் இயல்பாக இருந்திருக்கும், திரைப்படமும் மேலும் சிறப்பாக வந்திருக்கும். ஆனால் பத்து அவதார சாதனை என்பது சும்மாவா என்ன. கமலின் பத்து அவதாரங்களுடன் கதை, திரைக்கதையையும் மிகவும் மெனக்கட்டு பாலன்ஸ் செய்து ஒரு சிறந்த திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

யார் யார் இந்தப் படத்தை பார்க்க வேண்டும்:

  • கமல் ரசிகர்கள்.
  • கடின உழைப்பை பாராட்டத் தெரிந்தவர்கள்.
  • மூன்று மணிநேர பொழுதுபோக்கை தேடுபவர்கள்
  • குறை கண்டுபிடிப்பதில் சுவை காண்பவர்கள். எல்லாப் படங்களையும் போலவே இப்படத்திலும் குறைகளுக்குக் குறையொன்றுமில்லை

யார் யார் இப்படத்தை பார்க்கக் கூடாது:

  • ஏற்கனவே படம் பார்த்தவர்களின் சிலாகிப்புகள், விமர்சனங்கள் இவையெல்லாம் கேட்டுவிட்டு மிகுந்த எதிர்பார்ப்புடன் படத்துக்கு செல்பவர்கள். மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்த்தால் இந்தப் படம் மட்டுமல்ல, எந்தப் படமும் ஏமாற்றம் தான்.
  • சினிமாவை சீரியஸாக எடுத்துக் கொள்பவர்கள், ஆர்ட் ஃபிலிம் அபிமானிகள்.
  • சமூக சிந்தனைவாதிகள். படத்தில் ஆங்காங்கே சமூக சிந்தனைகளை அள்ளித் தெளித்திருப்பது உண்மை தான். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக இது ஒரு பொழுதுபோக்குப் படம், சமூக மாற்றங்களை கொண்டு வருவதற்காக முயன்று எடுக்கப்பட்ட படமல்ல.
  • மல்லிகா ஷெராவத் ரசிகர்கள். படத்தில் மல்லிகாவக்கு கொஞ்சம் ஸ்கோப் இருப்பது உண்மை தான், ஆனால் ரொம்ப பெரிய ஸ்கோப் எல்லாம் இல்லை. ;)

9 மறுமொழிகள்

  • விமர்சனத்துக்கு நியாயம் செய்திருக்கிறீர்கள்.

  • That was a neutral review. Because you have not said, ramabhakthas should not watch the movie I am planning to watch it very soon.

  • conguratulation kamal sir and K.S.Ravikumar sir.
    fantastic film

  • சூப்பரப்பு

  • கிழவனான நாகேஸ் வத வத பிள்ளைகள். ஜனத்தொகை பெருகி வரும் நிலையிலும் புத்திகெட்ட இனத்தின் செயல்பாடுகளையும் ஆங்காங்கே காட்டியுள்ளார்.

    காலி புல்லா நன்றியுள்ளவர் போல், நல்லவர் போல் காட்டப்பட்டாலும், அடிப்படையில் மடயன் மாதிரி காட்டிவிட்டார்.

    காலிபுல்லா பாத்திரமும், சீனாக்காரர் பாத்திரமும் அவசியமே இல்லாதவைகள்.

    அமெரிக்காவில் விஞ்ஞானி என்றாலும், அங்கேயும் திருட்டுக் கும்மளாக இந்தியர்களே இருப்பதை இப்படம் தெளிவாக்கியுள்ளது. பணத்திற்காக எதையும் செய்பவன் இந்தியன் என்பதை இப்படம் காட்டியுள்ளது. தீவிரவாதியுடன் என்றாலும் கைக்கோர்த்துக்கொள்ளும் இந்திய அடிப்படைக் கொள்கையையும் காட்டுகிறது.

    ஆனால் வெறுமனே இந்தியாவில் காண்போரையெல்லாம் தீவிரவாதி தீவிரவாதி எனும் பைத்தியக்காரத்தனத்தையும் இப்படம் வெளிப்படுத்துகிறது.

    அது அமெரிக்க CIA என்றாலும் சரி, விஞ்ஞான கமல் என்றாலும் சரி, முஸ்லீம் கமல் என்றாலும் சரி, எல்லோரையும் நாயுடு தீவிரவாதி தீவிரவாதி என்று எந்த ஆய்வும் இன்றி மனம் போனபோக்கில் கூறும் இந்தியாவின் அடிப்பட்ட மடமையையும் இந்த படம் காட்டியுள்ளது.

    எப்படியோ கமல் சில இடங்களில் சில வற்றை மறைமுகமாக சொல்லியுள்ளார்.

  • Kamal has worked very hard in this movie and has achieved another milestone in his life. Supereb actor – hats off to you Kamal.

    ~ Yogi from Sri Lanka – Hatton

  • எங்க பையனோட பெயர் ஸ்ரீநி. தான், அவன் நண்பர்கள் அழைப்பது, அந்தப் பெயரால் கவரப் பட்டு வந்தேன். அருமையான தேர்ந்தெடுக்கப் பட்ட முத்துக்கள். வாழ்த்துகள், ஆங்கிலப் பதிவும் பார்த்தேன், மீண்டும் வாழ்த்துகள்.

  • கீதா அம்மா, வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!


மறுமொழி இடுக